சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல் பரவிய நிலையில், தங்களது முதலாளியின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் குடும்ப உறுப்பினர்கள் போல சீர்வரிசையுடன் வடமாநில தொழிலாளர்கள் வந்து கலந்துகொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (40), கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பத்மாவதி. ராஜாமணியின் கட்டுமான நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை வேலையாட்கள் என நினைக்காமல் ராஜாமணி குடும்ப உறுப்பினர்களைப் போல பாவித்து வந்தார். இந்நிலையில், ராஜாமணியின் மகள் விஷ்ணுபிரியாவின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி பூந்தமல்லி அருகே தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல, தன்னிடம் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் எனக் கூறி அவர்களுக்கும் ராஜாமணி அழைப்பு விடுத்திருந்தார்.