வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற துணை நிற்க வேண்டும்: கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கு துணை நிற்க வேண்டும் என்று கோவையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கோவை பீளமேடு சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹாலில் அதிமுக, பாஜ, உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 4 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா, நேற்று நடந்தது. அவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்று பேசியதாவது: மக்களின் அன்பை பெற்று, இன்று ஆட்சியில் இருக்கிறோம். இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். அவர்களுக்கு நாம் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றி வருகிறோம். திராவிட மாடல் ஆட்சி, சொல்லாததையும் செய்யும் என நிரூபித்து வருகிறோம்.  

சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு இந்த ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கைதான் காரணம். இதேபோன்ற வெற்றியை வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பெற்றாக வேண்டும். அதற்கு உறுதி எடுக்கும்  நிகழ்ச்சியாகத்தான் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. திட்டங்கள் தொடர,  சாதனைகள் மலர, இந்த ஆட்சி தொடர்ந்து பீடு நடை போட, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற நீங்கள் இன்றே களம் இறங்கவேண்டும். அதற்குரிய வியூகம் அமைக்க வேண்டும்.

இன்றைக்கு மதத்தை பயன்படுத்தி, ஜாதியை  பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம்,  குழப்பத்தை ஏற்படுத்தலாம், அதன்மூலம்  இந்த ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்றெல்லாம் கனவு காண்கிறார்கள். ஆனால், நாம், எதைப்பற்றியும்  கவலைப்படாமல் பணியாற்ற வேண்டும். நம்முடைய ஒரே இலக்கு நாடாளுமன்ற தேர்தல்தான். கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில், நாம், ஒரே ஒரு தொகுதியை இழந்தோம். ஆனால், வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் புதுவையிலும் சேர்த்து மொத்தம் 40க்கு 40 தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும்.

அந்த வெற்றி மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி மட்டும் அல்ல, இந்தியா முழுதும் அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற பாடுபட்டு வருகிறோம். அதற்கு நீங்கள் பக்கபலமாக துணை நிற்க வேண்டும். நாடும் நமதே, நாளையும் நமதே என்ற இலக்குடன் பயணிப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவுக்கான ஏற்பாடுகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், மாவட்ட திமுக செயலாளர்கள் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

* வெள்ளி வீரவாள் பரிசு

விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மின்சாரத்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஆகியோர் வெள்ளி  வீர வாள் பரிசு வழங்கினர்.

Related Stories: