முதல்வர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமே முதல்வர் பதவி: சென்னையில் கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமே முதல்வர் பதவி என சென்னையில் அமைக்கப்பட்டுள்ள, ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ கண்காட்சியை  பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டானின் பிறந்தநாளை முன்னிட்டு ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்.28ம் தேதி இந்த கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இந்த கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று பார்வையிட்டார். அமைச்சர் சேகர்பாபு, நடிகர் யோகிபாபு உள்ளிட்டோரும் ரஜினியுடன் சேர்ந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.  

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் கடந்து வந்த பாதைகள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்தபோது எடுத்த புகைப்படம், அரசியலில்  நுழைந்தபோது கலைஞருடன் எடுத்து கொண்ட புகைப்படம் என பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அனுபவித்த கொடுமையை குறித்து விளக்கும் வகையில் ஒரு மாதிரி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்டாலின் போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டு சிறையில் அவர் நெஞ்சில் காவலர் மிதித்து கொண்டிருப்பதைபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சி திமுக தொண்டர்களை கலங்க வைத்தது. அதே இடத்தில் ரஜினிகாந்தும் புகைப்படம் எடுத்து கொண்டார்.

கண்காட்சியை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் ரஜினிகாந்த் கூறியதாவது: மிகவும் அருமையான கண்காட்சி, நீண்ட நாட்களாக வர வேண்டும் என இருந்தேன். படப்பிடிப்பு இருந்ததால் வர முடியவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினின்  வாழ்க்கை பயணமும் அரசியல் பயணமும் ஒன்று தான். 54 ஆண்டுகளாக அரசியலில் பயணித்து இருக்கிறார். கட்சியில் படிப்படியாக முன்னேறி, பல பதவிகளை வகித்து, தற்போது முதல்வராக பதவி வகிக்கிறார் என்றால் அது மக்கள் அவரது உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரம். நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் மக்கள் சேவையாற்ற வேண்டும். எனக்கும் முதல்வருக்கும் இடையே நிறைய இனிமையான அனுபவங்கள் இருக்கிறது. நேரம் வரும்போது கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். மாலையில் கவிஞர் வைரமுத்து கண்காட்சியை பார்வையிட்டார்.

Related Stories: