தற்கொலைகளை தடுக்கும் வகையில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு நிரந்தர தடை: அரசாணை வெளியீடு

சென்னை: தற்கொலைகளை தடுக்கும் வகையில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு நிரந்தர தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்கின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் கடும் விதிமுறைகளை செயல்படுத்த வேண்டுமென்று ஐ.நா சபை வலியுறுத்துகிறது. இதையடுத்து தமிழக அரசு 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை விதித்து அரசாணை வெளியிட்டது. தற்போது தமிழ்நாடு அரசு  6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் (கோவை) சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு 60 அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய பரிந்துரை செய்தது. மேலும், பல்வேறு தரவுகளின்படி, விவசாயிகளின் இறப்பிற்கான காரணம் பூச்சிக்கொல்லியில் இருக்கும் நச்சு பொருட்களால் நிகழ்ந்தவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில், மோனோகுரோட்டோபாஸ், ப்ரொபெனோபஸ், அசிப்பேட், ப்ரொபெனோபஸ்+சைபர்மெத்ரின், க்ளோரோபைரிபோஸ்+ சைபர்மெத்ரின், க்ளோரோபைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. மேலும், மஞ்சள் பாஸ்பரஸ் (3%) அதிகம் உள்ள ரடோல் எனப்படும் எலி மருந்திற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டன. தற்போது, தற்கொலை வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளையும் நிரந்தரமாக தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

Related Stories: