அரசு விதிகளை மீறியதாக நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் சங்க கட்டிடத்துக்கு சீல்: மாநகராட்சி அதிரடி

சென்னை: அரசு விதிகளை மீறியதாக நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் சங்க கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழ் திரைப்படத்துறையைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், சினிமா தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 24 தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. இதில் டப்பிங் யூனியன் எனப்படும் திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்கமும் ஒன்றாக அங்கம் வகிக்கிறது.‌ இந்த பழமை வாய்ந்த டப்பிங் சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வருகிறார்.  

இந்த சங்கத்தின் கட்டிட அலுவலகம், சென்னை சாலிகிராமம் 80அடி சாலையில் இயங்கி வந்தது. இந்த கட்டடிம் கடந்த 2011ம் ஆண்டு வாங்கப்பட்டு, அங்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடத்துடன் கூடிய இடத்தை வாங்கி அதிலிருந்து கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதன் பிறகு புதிய கட்டிடத்தை கட்டியுள்ளனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து முறையான அனுமதி பெறவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 75 கோடி ரூபாய் செலவில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக,  சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. புகார் குறித்து மாநகராட்சி சார்பில் டப்பிங் யூனியன் சங்க நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தை சீல் வைக்கப் போவதாகவும் மாநகராட்சி தரப்பில் ஏற்கனவே டப்பிங் யூனியன் சங்கத்துக்கு அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதனிடையே ராதாரவி தலைமையிலான சங்க நிர்வாகிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ராதாரவியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று டப்பிங் யூனியன் சங்கத்திற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், டப்பிங் யூனியன் சங்கம் செயல்படும் கட்டிடத்துக்கு சீல் வைத்து பூட்டு போட்டனர். அதேநேரம் இதை தடுக்க ராதாரவி எடுத்த இறுதிக்கட்ட முயற்சிகள் எதுவும் பயன் தராமல் போனதால், நேற்று (மார்ச் 10) இரவோடு இரவாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ராதாரவி தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டல உதவி பொறியாளர் தலைமையில் சீல் டப்பிங் சங்க கட்டிடத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: