‘குளத்தில்தான் தாமரை மலரும்'; அண்ணாமலைக்கு மனநிலை சரியில்லை: திருநாவுக்கரசர் எம்பி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், திருச்சி எம்பி திருநாவுக்கரசர் அளித்த பேட்டி: சமீபத்தில் வந்த நீதிமன்ற தீர்ப்பில் அமைச்சரவை கூட்டத்தில், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் சட்டங்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இவ்வளவு நாட்கள் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது திருப்பி அனுப்பி உள்ளார்.

சட்டமன்ற நடைமுறைப்படி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் கட்டாயம் ஆளுநர் கையொப்பம் இட வேண்டும். பல விஷயங்களில் ஆளுநர் ஜனநாயகத்திற்கு புறம்பாகவும், விதிகளுக்கு புறம்பாகவும் செயல்படுகிறார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்போடு பேச வேண்டும். அவர் சட்டத்திற்கு புறம்பாகவோ, குற்றவியல் சட்டத்திற்கு எதிராகவோ செயல்படும்போது அவர் மீது வழக்கு தொடர்வது என்பது அரசின் கடமை. தமிழகத்தில் பல்வேறு குளங்களில் தாமரை மலர்ந்து கொண்டு தான் வருகிறது. ஆனால்  ஆட்சியில் மலரும் என்று நம்பிக்கை இல்லை.

ஜெயலலிதா பாணியை நான் கடைபிடிக்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளது, அவருக்கு மனநிலை சரியில்லை என்பதை காட்டுகிறது. அதிமுகவை விட்டு பாஜக பிரிய முடியாது. பாஜகவை விட்டு அதிமுக பிரிய முடியாது. இது 2 கட்சிகளுக்கும் தெரியும். அவர்களுக்குள் தற்போது நாடகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: