வைகோவுடன், திருமாவளவன் திடீர் சந்திப்பு

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை திடீரென சந்தித்து பேசினார். சமீபத்தில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பிரபாகரன் தம்மை இலங்கைக்கு அழைத்தது பற்றி விவரித்திருந்தார். குறிப்பாக, அந்த பேட்டியில் வைகோவை, பிரபாகரன் அழைக்கவில்லை போன்று திருமாவளவன் சொல்லியதாக மதிமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை மதிமுகவும் வெளியிட்டது.

அதில், திருமாவளவன் மீது வைகோ வருத்தம் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்ற தலைவர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் அரசியல் செய்ததாக திருமாவளவன் சொல்வது வருத்தமளிக்கிறது என்று மதிமுக துணைப் பொதுச் செயலாளர் தி.மு.சேந்திரன் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், நாகர்கோவிலில் திருமாவளவனிடம் நிருபர்கள் இப்பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய போது, இப்பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோவின் பங்கு குறித்து திருமாவளவன் பெருமிதம் தெரிவித்து பேசினார்.

இதன் மூலம், மதிமுக தரப்பு சமாதானமானதுடன், 2 நாட்களாக நிலவி வந்த முணுமுணுப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது, மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது, இலங்கை தமிழர் விவகாரத்தில் எழுந்த கருத்துகள்  தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.

Related Stories: