இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சேலம் சென்ற 13 வயது சென்னை சிறுமி மீட்பு

சென்னை: சென்னை திருவிக நகரை சேர்ந்த ஒருவரின் 13 வயது மகள், பெரம்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த புதன்கிழமை மதியம் உடல்நிலை சரியில்லை என்று கூறி, பள்ளியிலிருந்து பாதியிலேயே புறப்பட்டார். ஆனால், வீட்டிற்கு செல்லவில்லை. மாலை வெகு நேரமாகியும் மகள் வீட்டிற்கு வராததால், அவரது தந்தை செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் பகுதியில் இருந்து சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்ட குழந்தைகள் நல அமைப்பினர், காணாமல்போன சிறுமி சேலத்தில் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் செம்பியம் போலீசார் சேலத்திற்கு சென்று சிறுமியை மீட்டு, சென்னைக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம்  சேலத்தை சேர்ந்த ஒருவர் சிறுமியை காதலிப்பதாக கூறியதால், சிறுமி காதலனை பார்ப்பதற்காக கோயம்பேட்டிற்கு சென்று பேருந்து மூலமாக சேலம் சென்று, அங்கு தனது காதலனை பார்த்துவிட்டு, மீண்டும் இரவு சேலம் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து ஏறியதும் தெரிந்தது. அப்போது, சிறுமி பள்ளி உடையில் இருந்ததால், அங்கிருந்த குழந்தைகள் நல ஆர்வலர்கள் பார்த்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவர் சென்னையிலிருந்து தனது காதலனை பார்ப்பதற்காக சேலத்திற்கு வந்ததாக கூறியதும் தெரிய வந்தது. பின்னர், போலீசார் சிறுமிக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories: