ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாதனை 6 முறை இதய துடிப்பு நின்ற ஆசிரியர் உயிர் பிழைத்தார்: டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் மறுபிறவி

சென்னை: 6 முறை இதய துடிப்பு நின்ற நிலையில் தீவிர சிகிச்சையின் முயற்சியால் ஆசிரியர் ஒருவரை மீண்டும் உயிர் பிழைக்க வைத்துள்ளனர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள். சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜேஷ் என்பவருக்கு கடந்த 28ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, சிபிஆர் மற்றும் ஷாக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இதய துடிப்பு சீரானது. ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே இதய துடிப்பு நின்று விட்டதாக தெரிவித்த நிலையில், இதய துடிப்பு சீரானது மருத்துவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இதய ரத்த குழாயில் அடைப்பு இருந்தது பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி ரத்தக் குழாயில் இருந்த அடைப்பு சீர்செய்யப்பட்டது. ஆஞ்சியோ பிளாஸ்டு சிகிச்சை செய்யப்படுவதின் மூலம் இதயத் துடிப்பு சீராகும் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மீண்டும் இதயத்துடிப்பு நின்று போனது. இதையடுத்து 30 நிமிடங்களுக்கு சி.பி.ஆர். செய்து இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டன. பிறகு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசத்தில் இருந்த அவர் படிப்படியாக மீண்டு வந்தார். படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு நடக்கவும், சாப்பிடவும் ஆரம்பித்தார்.

இதுகுறித்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகையில், ‘‘இதயத் துடிப்பு குறிப்பிட்ட நேரத்திற்கு  மேல் நின்றுவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். ஆனால் இவருக்கு 6 முறை இதயத்துடிப்பு நின்றுவிட்டது. அதில் ஒரு மணி நேரத்தில் 5 முறை இதயத் துடிப்பு இல்லாமல் போனது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் இயல்பு நிலைக்கு அவர் திரும்பினார். இறுதிக்கட்டம் வரை  மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற போராடினர். இதன் காரணமாக, அவரது இதயத் துடிப்பு படிப்படியாக சீராகி  முன்னேற்றம் ஏற்பட்டது. இது மருத்துவத்துறையில் மிகப் பெரிய ஆச்சரியத்தை  ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று நிகழ்வது அரிதான ஒன்று’’ என்றார்.

Related Stories: