ஆவடி: கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு புத்தகம் விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு ஆவடியில் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியில் அதிக அளவில் விற்பனையை செய்துக்காட்ட உள்ளதாக அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார். ஆவடி மாநகராட்சியில் 2023ம் ஆண்டு புத்தக கண்காட்சியின் ‘லோகோ’ அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு 2023ம் ஆண்டின் புத்தக கண்காட்சி ‘லோகோ’ வை அறிமுகப்படுத்தினர். இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் நாசர் பேசியதாவது, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து வருகின்ற 17.3.2023 முதல் 27.03.2023 வரை 11 நாட்கள் ஆவடி எச்.வி.எஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. தினமும் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 100 அரங்குகளில் 10,000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும், இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ரூ.10 முதல் ரூ.1000 வரை புத்தகங்கள் விற்பனைக்கு வைக்க உள்ளது.
