மாமல்லபுரம் பேரூராட்சியில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி திருக்குளத்தெரு, வேதாசலம் நகரில் தார் சாலை அமைக்க ரூ.1.31 கோடியில் பூமி பூஜை போட்டு பணிகள் துவங்கப்பட்டன. மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருக்குளத் தெரு, வேதாசலம் நகரில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில், சில ஆண்டுகளாக சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால், ஜல்லிக் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியது. மேலும், சாலைகளில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு பாதாள குழிபோல் காட்சி தந்தது. அச்சாலை, வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவதியடைந்து வந்தனர். குண்டும் குழியுமாக காணப்படும் இச்சாலையில், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் தவறி விழுந்து காயமடைந்துள்ளனர்.

குறிப்பாக, விபத்து ஏற்பட்டாலோ அல்லது யாராவது ராட்சத அலையில் சிக்கி கடலுக்கு இழுத்து செல்லப்பட்டாலோ அவர்களை உடனடியாக மீட்க தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தது. மேற்கண்ட இடங்களில் புதிதாக சிமென்ட் சாலை அல்லது தார்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள் கட்டமைப்பு திட்டம் மூலம், இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க  ரூ.1.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.  இதையடுத்து, தார்சாலை அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது. மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் மோகன் குமார், லதாகுப்புசாமி, கெஜலட்சுமி கண்ணதாசன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, பூமி பூஜை போட்டு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.   இதில், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகானந்தம், முருகன், தூய்மை ஆய்வாளர் ரகுபதி, திமுகவை சேர்ந்த  கண்ணதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருக்குளத்தெரு, வேதாசலம் நகரில் சாலை அமைக்கும் பணி துவங்கியதற்கு, அப்பகுதி மக்கள் வரவேற்பும்,  மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: