கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இயற்கை மற்றும் ரசாயன உரம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: எதிர்காலத்தில் எல்லா வகையான உரங்களும், இயற்கையான உரங்களாக  இருந்தாலும் சரி, மற்ற உரங்கள் ரசாயன உரங்களானாலும் சரி கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கிடைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு  வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். இதுகுறித்து, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்னையில் நேற்றுஅளித்த பேட்டி: இந்த ஆண்டு 2022-23ல் கடந்த 8ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கின் அடிப்படையில் 14 லட்சத்து 46 ஆயிரம் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டு 12 ஆயிரத்து 671 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டியிருக்கிறது. ரூ.12 ஆயிரம் கோடி விவசாய கடன், பயிர்க்கடன் தள்ளுபடி என முதல்வர் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்திய பெருமையும் இந்த துறைக்கு உண்டு.  

கூட்டுறவு சங்கங்களின் மூலமாக தற்போது உர விற்பனையும் நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கிராம வங்கிகளை பொறுத்தவரையில், விவசாயிகளுக்கு கடன் கொடுக்கின்ற ஒரு அமைப்பாக இருக்கின்ற காரணத்தால், அவர்களுக்கு 25% முதல் 30% வரை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே, காலத்திற்கேற்றவாறு, எந்த காலக்கட்டங்களில் என்ன உரம் தேவைப்படுகிறதோ, அவற்றை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக செய்து வருகிறார்கள். கடந்த காலங்களை விட இனி எதிர்காலத்தில் எல்லா வகையான உரங்களும், இயற்கையான உரங்களாக இருந்தாலும் சரி, மற்ற உரங்கள் ரசாயன உரங்களானாலும் சரி, அவற்றையும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கிடைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: