நிர்வாகிகள் கட்சி தாவல், அதிமுகவுடன் மோதல் எல்.முருகன், அண்ணாமலையுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை

கிருஷ்ணகிரி: பாஜ நிர்வாகிகள் கட்சி தாவல், அதிமுகவுடன் மோதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து  கிருஷ்ணகிரியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோரிடம் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை நடத்தினார். பாஜ ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் பாஜவில் இருந்து விலகி கடந்த சில தினங்களாக அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அதிமுக-பாஜ தலைவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பில் அண்ணாமலை, எடப்பாடி படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில், கோவையில் பேட்டியளித்த அண்ணாமலை, ‘ஜெயலலிதாவை விட 1000 மடங்கு என் மனைவி பலமானவர்’ என தெரிவித்தது, அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட பாஜ., அலுவலகத்தை பாஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். இதற்காக பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்திற்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அங்கு 30 நிமிடம் இருந்த அவர், பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் முருகன், தமிழக பாஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக விவகாரம், பாஜ நிர்வாகிகள் கட்சி தாவல், இனி எவ்வாறு அதிமுகவை எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பாஜ., மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெறும் இடத்திற்கு சென்றார். நட்டாவிடம் நிருபர்கள் பேட்டி கேட்டபோது அவர் மறுத்து சென்றுவிட்டார்.

Related Stories: