கடப்பா கோதண்டராம சுவாமி கோயிலில் வருகிற 30ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடக்கம்-தலைமை செயல் அதிகாரி தகவல்

திருமலை :  கடப்பா கோதண்டராம சுவாமி கோயிலில் வருகிற 30ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கப்பட்ட உள்ளதாக தலைமை செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார்.  

ஆந்திர மாநிலம், ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயில் வருடாந்திர பிரமோற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

 கலெக்டர் விஜயராமராஜூ தலைமை தாங்கினார். எஸ்பி அன்புராஜன்  முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா பங்கேற்று பேசியதாவது: கடந்தாண்டு பிரமோற்சவத்தின் போது ஏற்பட்ட முந்தைய தவறுகளை சரி செய்து சீதா, ராமரின் பிரமோற்சவம் மிக பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும்.

இதற்கு   தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.  பிரமோற்சவ ஏற்பாடுகளை அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைத்து விரைந்து முடிக்க வேண்டும்.  இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து வருகிற 16ம் தேதி மீண்டும் ஆய்வு நடத்தப்படும்.

சுவாமியின் பிரமோற்சவம் மார்ச் 30ம் தேதி(வியாழக்கிழமை) ராமநவமியன்று தொடங்கும்.  ஏப்ரல் 3ம் தேதி அனுமந்த  வாகனமும், 4ம் தேதி கருட வாகனமும், 5ம் தேதி சீதா ராமர் கல்யாணம் மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீதாராமர் திருக்கல்யாணத்திற்கு மாநில அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன்  பட்டு வஸ்திரம் மற்றும் முத்துக்களை வழங்க உள்ளார்.  ஏப் 6ம் தேதி ரத உற்சவம், ஏப் 7ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும்,  8ம் தேதி புஷ்பயாகம் நடைபெறும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து, கலெக்டர் விஜயராமராஜூ பேசுகையில், ‘பிரமோற்சவத்தின் போது  வரும் பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகள்  செய்யப்படும்.  இதில் பாதுகாப்பு, வாகன நிறுத்தம், உணவு விநியோகம், தற்காலிக கழிப்பறைகள், தடையில்லா மின்சாரம், முதலுதவி சிகிச்சை மையங்கள்,  பேருந்துகள், உதவி மையங்கள், அடையாள பலகைகள், சுகாதாரம் மற்றும் பொது முகவரி அமைப்பு துறைகள் தங்களது செயல் திட்டங்களை வருகிற 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும்’ என்றார்.

முன்னதாக, செயல் அதிகாரி தர்மா மற்றும் கலெக்டர் விஜயராமராஜூ   ஆகியோருடன் இணைந்து  கோதண்டராம சுவாமி கோயில் பிரமோற்வத்திற்கான போஸ்டர்கள் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், இணை கலெக்டர்  சாய்காந்த் வர்மா, தேவஸ்தான தொலைக்காட்சி முதன்மை நிர்வாக அதிகாரி சண்முககுமார், முதன்மை பொறியாளர் நாகேஸ்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: