சென்னை குருநானக் கல்லூரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

சென்னை: குருநானக் கல்லூரியில் நேற்று நடந்த தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கபட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கல்லூரிகளில் ‘மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரைத் திட்டம்’ நிகழ்த்த திட்டமிடப்பட்டு, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்தபட்சம் 1 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை 60 நாட்களில் நடத்திமுடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சென்னை, குருநானக் கல்லூரி கலையரங்கில் நடந்த மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் “சமூகநீதிப் பொருளாதாரமும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்“ என்னும் பொருண்மையில் எம்.எம்.அப்துல்லா எம்.பி, ஆதலால் காதல் செய்வீர்” என்ற தலைப்பில் மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நட்ராஜ் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் காந்தி திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். குருநானக் கல்லூரியின் முதல்வர் ரகுநாதன் நன்றி கூறினார். குருநானக் கல்லூரிக்கான “நான் முதல்வன்” சிறப்பு தொடர்பாளர் கவிதா  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நிகழ்வில் ஏறத்தாழ 1000 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் தமிழ்ப் பெருமிதம் சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாரட்டிப் பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் என பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பெற உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: