பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு பெங்களூரு சிறையில் இருந்து 2 பேர் சென்னை சிறைக்கு மாற்றம்: 5 நாள் காவலில் எடுத்து விசாரணை

பெரம்பூர்: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில், நீதிபதி உத்தரவின்படி, முக்கிய குற்றவாளிகள் 2 பேரை பெங்களூரு சிறையிலிருந்து, சென்னைக்கு அழைத்து வந்து, 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஜேஎல் நகைக்கடையில், கடந்த மாதம் 10ம்தேதி வெல்டிங் மிஷினால் துளைபோட்டு, 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம்  மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரனின், மகன் ஸ்ரீதர் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ரம்யா பாரதி ஆகியோர் மேற்பார்வையில், 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய 2 பேரும், இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளதால், அப்பகுதி போலீசார் நகைகளை வாங்கிக் கொண்டு, இவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்து சென்று, மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலைய போலீசார் உதவியுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கஜேந்திரன் (31), திவாகர் (28) ஆகிய 2 பேரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில், செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு உள்ளிட்ட தனிப்படை போலீசார்,  2 பேரையும் அழைத்து கொண்டு, பெங்களூரு சென்றனர். அங்கு, கடந்த 4 நாட்களாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவர்களிடமிருந்து, கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வெல்டிங் மிஷின், காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் குறிப்பிட்ட அளவு தங்க நகைகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஏற்கனவே பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்த கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகியோரை, சென்னை அழைத்து வருவதற்கான நீதிமன்ற பணிகளை மேற்கொண்டு நீதிமன்ற ஒப்புதலுடன் நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். நேற்று காலை அவர்கள் 2 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய திருவிக நகர் போலீசார், அவர்களை 10 நாள் போலீசில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ், கங்காதரன் மற்றும் ஸ்டீபனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

அதன் அடிப்படையில், குற்றவாளி 2 பேரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து முழு தகவல்களும் தெரியவரும் எனவும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை இரண்டரை கிலோ தங்கத்தை மட்டும் கங்காதரன் பெங்களூரு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார் எனவும், மீதி நகைகள் எங்கு உள்ளன? யார் யாருக்கு எவ்வளவு நகைகள் அவர் பிரித்துக் கொடுத்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட கஜேந்திரன், திவாகர் ஆகிய பேருக்கும், 5 நாள் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைவதால், போலீசார் அவர்களை நீதிமன்ற அனுமதியோடு மீண்டும் புழல் சிறையில் நேற்று அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அருண், கவுதம் ஆகிய இருவரை கர்நாடகாவில் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

* நகைகளை உருக்கிய கொள்ளையர்கள்

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில், நகைக்கடையின் முத்திரை இருந்ததால் குறிப்பிட்ட நகைகளை கொள்ளையர்கள் உருக்கி, அதனை பிஸ்கட் வடிவில் மாற்றியுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் கங்காதரன் மற்றும் ஸ்டீபனை பெங்களூரு அழைத்து சென்று, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அவர்கள் எங்கு வைத்துள்ளார்கள் என்பது குறித்தும், யார் யாரிடம் எவ்வளவு கொடுத்துள்ளார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி, அந்த நகைகளை மீட்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: