கட்சியை விட்டு வெளியேறக் கோரி எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் யுத்தம்: மதுரையிலும் ஓபிஎஸ் அணி ஒட்டியது

மதுரை: அதிமுகவை விட்டு வெளியேறக் கோரி மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உரிமைக்கோரி ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி யுத்தம் நடத்தி வருகிறது. இதற்கிடையே, ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் படுதோல்வியை சந்தித்தார். எடப்பாடி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்ததால், கட்சியை விட்டு வெளியேறக்கோரி எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களாக திருச்சி, நெல்லை, உளுந்தூர்பேட்டை என பல்வேறு இடங்களில் எடப்பாடியை கடுமையாக தாக்கி போஸ்டர் ஒட்டி வருகின்றனர். சில இடங்களில் எடப்பாடி ஆதரவாளர்கள் அந்த போஸ்டர்களை கிழித்ததால் இருதரப்புக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மதுரை பீபீ குளம், நாராயணபுரம், வள்ளுவர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக மதுரை மாநகர் மாவட்டம், வடக்கு தொகுதி, 2ம் பகுதி நிர்வாகிகள் என்ற பெயரில், அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், ஆகியோரின் புகைப்படங்களுடன் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘துரோகி எடப்பாடி பழனிசாமியே... அதிமுக கழகத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும்’ எனவும், ‘கழக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் வகுத்த சட்ட விதியை காற்றில் பறக்க விட்டு, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா வகித்த பதவியை கபளீகரம் செய்ய துடிக்கும் எடப்பாடியே, கழகத்தை விட்டு வெளியேறு’ என்ற வாசகங்களோடு இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த விவகாரம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் அண்ணாமலையுடன் மோதல் போக்கு, மறுபக்கம் ஓபிஎஸ் அணி போஸ்டர் யுத்தத்தால் எடப்பாடி பழனி்சாமி என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றார்.

Related Stories: