ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசிய விவகாரம் பாஜ தலைவர்களை விமர்சித்து அதிமுகவினர் பேசக்கூடாது: மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடப்பாடி உத்தரவு

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜ தலைவர்களை விமர்சித்து அதிமுக தலைவர்கள் யாரும் பேசக்கூடாது என்று நேற்று ற எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், நேற்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஜெயக்குமார், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் வரை நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி தலைவர்கள் பேசினர். இந்த கூட்டத்தில் பேசிய பலரும், ‘தற்போது பாஜ - அதிமுக இடையே நடைபெறும் உச்சக்கட்ட மோதல் குறித்து பேசினர். குறிப்பாக, தமிழக பாஜ நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததை பாஜ நிர்வாகிகள் விமர்சித்து வருகிறார்கள். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன் பேசும்போது, ‘பாஜவில் உள்ள 2, 3, 4ம் கட்ட தலைவர்களை, தங்கள் கட்சியில் சேர்த்துதான் அதிமுக வளரும் நிலை உள்ளது. மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போல் நான் செயல்பட விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார். எடப்பாடியின் படத்தையும் பாஜவினர் தீயிட்டு கொளுத்தி உள்ளனர். எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கு, தேவைப்பட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜவை கழட்டிவிட வேண்டும் என்றனர்.

அதேபோன்று, அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். அடுத்து, தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக பெற்ற தோல்வி குறித்தும் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தின் இறுதியில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக அதிமுக மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: அதிமுக கட்சி வளர்ச்சி, ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்பட்ட தோல்வி, பொதுச்செயலாளர் தேர்தலை விரைவாக நடத்துவது, பாஜ தலைவர்கள் அதிமுகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருவது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பலரும் ஆவேசமாக பேசினர்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும். விரைவில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையுடன், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். 2024ம் ஆண்டு தேர்தலிலும் பாஜ கூட்டணியில் அதிமுக இணைந்து தேர்தலில் போட்டியிடும். தமிழக பாஜ தலைவர்கள் பேச்சுக்கு, அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் உணர்ச்சி வசப்பட்டு பதிலடி கொடுக்க வேண்டாம். அப்படி பதிலடி கொடுத்தால் அதிமுக தலைவர்களுக்குதான் பிரச்னை வரும். அதனால் பாஜ தலைவர்களை விமர்சித்து அதிமுக தலைவர்கள் யாரும் பேசக்கூடாது. கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: