ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை திருப்பி அனுப்பியது ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார மமதை: தமிழ்நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* வைகோ(மதிமுக பொதுசெயலாளர்): ஆன்லைன் ரம்மி சூதாட்ட  விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் மட்டும் 47 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிகார மமதையில் கிடப்பில் போட்டதன் விளைவாக இவர்களின் உயிர் பறிபோனது. இதற்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி 142 நாட்கள் கழித்து அந்த சட்டத்தை திருப்பி அனுப்பி வைத்து இருப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட முன்வரைவில் எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி, ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். அப்படி மீண்டும் அனுப்பினால் ஆளுநர், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200இன் படி ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.

* விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல், அதனை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. மேலும், ஆளுநரின் காலதாமதத்தால் ஆன்லைன் ரம்மி விளையாடி தமிழகத்தில் இதுவரை 44 பேர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. முக்கிய பொறுப்புகளில் உள்ள ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா. அப்பாவி உயிர்கள் பலியாவதை தடுக்காமல், இனியும் ஆளுநர்தாமதம் செய்தால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ததற்கு இணையாக அமைந்து விடும்.

* அன்புமணி பாமக தலைவர்):

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால், 18 பேரின் தற்கொலை, அவர்களின் குடும்பங்கள் தெருவுக்கு வந்ததற்கு, ஆளுனர் ரவி தான் பொறுப்பேற்க வேண்டும். வரும் 20ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* டி.டி.வி.தினகரன்(அமமுக பொதுசெயலாளர்): ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் 2வது முறையாக மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் உயிரோடும், சமுதாய நலத்தோடும் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசும், ஆளுநரும் இணைந்து சட்டமசோதா விரைவில் அமலுக்கு வருவதற்கு வழிவகுப்பது மட்டுமே இன்றைய சூழலுக்கு அவசர அவசிய தேவையாகும்.

* நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ கட்சி தலைவர்): ஆன்லைன் ரம்மியால் மக்கள் பாதிப்படுவதை கருத்தில்கொண்டு  சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் செயல்பாட்டை தடுக்கும் நோக்கம் கொண்டதாகவும், சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய மக்கள் விரோத ஆளுநரை உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்.

Related Stories: