பரமக்குடியில் அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் கைதான பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு மாஜி அமைச்சர் உறவினர் சிக்குகிறார்?

சென்னை: பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் உறவினர் சிக்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுக்கா புத்துநகரில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவியை சிலர் கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கியதாக பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அந்த புகாரின் படி அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பள்ளி படிப்புக்கு உதவி செய்வதாக கூறி தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்தது பற்றி அதிர்ச்சி தரும் தகவலை அளித்தார்.  அதைதொடர்ந்து பள்ளி மாணவி அளித்த ரகசிய தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தற்காக பணம் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக வாட்ஸ் அப்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவியது. பின்னர் போலீசார் அந்த ஆடியோவை வைத்து விசாரணை நடத்திய போது, பரமக்குடி 3வது வார்டு கவுன்சிலரும், அதிமுக நகர அவைத்தலைவருமான சிகாமணி மற்றும் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜா முகமது, மறைத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர் ஆகியோர் பள்ளி மாணவியை கூட்டு பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் அதிரடியாக அதிமுக கவுன்சிலர் உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ்  அதிரடியாக கைது செய்தனர். மேலும், மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக உமா மற்றும் கயல்விழி ஆகியோரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது ெசய்தனர்.  கைது செய்யப்பட்ட அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேரிடம் நடத்திய விசாரணையில், பாலியல் புரோக்கராக செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுமிகளிடம், உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்கு தேவையான செலவுகளை வசதியான நபர்கள் நன்கொடையாக தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. அந்த வகையில் பரமக்குடி சுற்று பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் படிப்புக்கான நன்கொடை வாங்கி தருவதாக அதிமுக கவுன்சிலர் மூலம் அவரது அரசியல் கட்சி பிரமுகர் சிலருக்கு இரையாக்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த பாலியல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் உறவினர் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதை கைது செய்யப்பட்ட அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரம், அவர் முன்னாள் அமைச்சர் என்பதால் அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உயர் அதிகாரிகளிடம் உரிய ஆதாரங்களுடன் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதைதொடர்ந்து பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.  டிஜிபியின் இந்த உத்தரவை தொடர்ந்து பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் வழக்கு தொடர்பான ஆவணங்கள், கைதுசெய்யப்பட்ட முன்னாள் அதிமுக நகர மன்ற தலைவர் உட்பட 5 பேர் அளித்த வாக்குமூலம் தொடர்பான ஆணைவங்களை பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  இதையடுத்து சிபிசிஐடி போலீசார் பரக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அளித்த ஆவணங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 5 பேர் அளித்த வாக்குமூலத்தின் படி தனது விசாரணையை நேற்று இரவே தொடங்கியுள்ளனர்.  இதனால் பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தொடர்புடைய அரசியல் கட்சியினர் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: