நிர்வாகிகள் கட்சி தாவல் விவகாரத்தில் மோதல் முற்றுகிறது ஜெயலலிதாவை விட 1000 மடங்கு என் மனைவி பலமானவர்: அண்ணாமலை பேட்டி வாய்கொழுப்பு என செல்லூர் ராஜு பதிலடி

சென்னை: அதிமுக-பாஜ இடையே மோதல் முற்றி வரும் நிலையில், ஜெயலலிதாவை விட 1000 மடங்கு என் மனைவி பலமானவர் என்று அண்ணாமலை கூறி உள்ளது, அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வாய் கொழுப்பு என செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக யாருக்கு என்ற அதிகார யுத்தம் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடந்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எடப்பாடி வேட்பாளர் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அதிமுக-பாஜ இடையே வார்த்தை மோதல் துவங்கியது. இந்த சூழலில், அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்த ஐடி விங் நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் பாஜவில் இருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அப்போது அவர், ‘அண்ணாமலை ஒரு 420மலை. இவரின் வார் ரூம் எவ்வளவு பேரை காவு வாங்க போகிறதோ. விரைவில் நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறுவார்கள்’ என தெரிவித்தார்.  அவரை தொடர்ந்து பாஜ மாநில நிர்வாகி திலிப் குமாரும் அதிமுகவில் சேர்ந்தார். சென்னை, மதுரை, தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாஜவினர் அதிமுகவில் இணையத் தொடங்கினர். அனைவரும் அண்ணாமலை மீது பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாமலை, ‘ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. ஜெயலலிதா, கலைஞர் போன்று நானும் ஒரு தலைவர்தான். அதிமுகவை வளர்க்க பாஜவின் 3ம் கட்ட, 4ம் கட்ட நிர்வாகிகள் தேவைப்படுகிறார்கள்’ என்று எடப்பாடியை தாக்கி பகிரங்க பேட்டியளித்தார். மேலும் பாஜவினர் பல இடங்களில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவையில் பேட்டியளித்த அண்ணாமலை, ‘என் தாய் ஜெயலலிதாவை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தவர், என் மனைவி ஜெயலலிதாவை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தவர், நானும் அதைபோலத்தான்’ என்று கூறியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி விவகாரத்தில் பஞ்சாயத்து செய்து வந்த அண்ணாமலை, தற்போது அக்கட்சியினர் பெரிதும் மதிக்கும் ஜெயலலிதாவையே மட்டம் தட்டி பேசியது அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது சகஜம்தான்.  எங்கள் கட்சியில் இருந்தவர்கள் பாஜவில்  சேரும்போது இனித்தது, இப்போது அங்கிருந்து இங்க வரும்போது கசக்குதா.  அரசியலில் சகிப்புத்தன்மை வேண்டும். அதுவும் பாஜவினருக்கு சகிப்புத்தன்மை  வேண்டும். வாயடக்கம் தேவை. வாய் கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளுகிற  திமிரோடு பேசக்கூடாது.

அதுதான் நாங்கள் விடுக்கும் செய்தி. கூட்டணி கட்சி  என்று தோளில் உட்கார்ந்து, காதை கடிப்பதை அதிமுக என்றும்  பொறுத்துக்கொள்ளாது. எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரிக்கும் அளவுக்கு  பாஜவினர் தரம் தாழ்ந்து போய்விட்டனர். ஒரு காலத்தில் பாஜவினர் என்றால்  மதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு பாஜவில் இருப்பவர்கள்  தகுதியற்றவர்கள். இவர்கள் விஷக் கிருமிகள். இவர்களையெல்லாம் அடக்கி வைக்க  வேண்டிய அண்ணாமலையே, இன்றைக்கு வாய்க்கொழுப்பாக பேசுகிறார். ஜெயலலிதா போல  நான் வருவேன் என்கிறார்.  ஜெயலலிதாவுக்கு இணையான தலைவர் தமிழகத்தில் இல்லை.  அவரைபோல யாராலும் வர முடியாது. ஊர் குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாக  முடியாது’ என்று கடுமையாக தாக்கி பதிலடி கொடுத்து உள்ளார். அண்ணாமலைக்கு அதிமுக தலைவர்கள் நேரடியாக எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், அவர் நேரடியாக பதில் சொல்லாமல் ஆதரவாளர்கள் மூலம் கடுமையாக பதிலடி கொடுப்பதாக அதிமுக-பாஜ இடையே மோதல் முற்றி வருகிறது.

* ஜே.பி.நட்டா இன்று முக்கிய ஆலோசனை  அதிமுக-பாஜ இடையே மோதல் முற்றிய நிலையில், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று கிருஷ்ணகிரி வருகிறார். குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில், மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை, திறந்து வைக்க உள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பாஜ அலுவலகங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார். பின்னர், பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால், அண்ணாமலை, எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன், எடப்பாடியுடனான மோதல் போக்கு, பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற அதிமுக திட்டமிட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனையில் ஜே.பி.நட்டா ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: