வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் தற்போது தணிந்துவிட்டது: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

திருப்பூர்: வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழர்கள் தாக்கும் வீடியோக்கள் பரவியது. இது முற்றிலும் போலியான வீடியோ என்று பிறகு உறுதிப்படுத்தப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர் விவகாரம் தொடர்பாக திருப்பூரில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் தொழில்துறையினரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்த்தித்து பேசிய அவர்; புலம்பெயர் தொழிலாளர்களிடம் நலன் சார்ந்து நிறை குறைகளை கேட்டறிந்தோம். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனையில் சாதாரண நிலை திரும்ப உதவிய தொழில் துறையினர் மற்றும் காவல்துறைக்கு, பத்திரிகை துறையினருக்கு நன்றி. வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் தற்போது தணிந்துவிட்டது. இருந்தாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், ஏனென்றால் தொடர்ந்து பொய்யான செய்திகளை ஒரு சிலர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறோம். புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய வதந்தி தொடர்பான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியது தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வதந்தி பரப்பிய முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வதந்தி என்பது மிகவும் ஆபத்தானது; எந்த தவறும் செய்யாதோர் வதந்தியால் பாதிக்கப்பட்டுள்ளனர் வதந்தி பரப்பியவர்களை நிச்சயம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம். இதனால் பெருமளவு இந்த வதந்தி, வீடியோக்கள் குறைந்திருக்கிறது. இருந்தாலும் இந்த சூழ்நிலை அசாதாரண சூழ்நிலையாக இருப்பதால் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஒரு உரையாடல் வைத்துக் கொள்ள வேண்டும் என தொழிலதிபர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: