தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு; மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் நிராகரிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் நிராகரிக்க முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழ்நாடு அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி; மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் நிராகரிக்க முடியாது. ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. ஆளுநர் முடிவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படியே நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து பரிந்துரைகள் பெறப்பட்டன.

நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் படியே மசோதா நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் மீண்டும் புதிய மசோதா கொண்டு வர எந்தத் தடையும் இல்லை என கூறியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர், நாங்கள் அதிகாரம் உள்ளது என தெளிவுபடுத்தி இருக்கிறோம். மாநில அரசின் அதிகாரங்கள் பட்டியலில் உள்ள 34-வது பிரிவின் கீழ் தான் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் குறிப்பிட்டது போல் 33-வது பிரிவின் கீழ் மசோதா நிறைவேற்றப்படவில்லை. மக்களை பாதுகாக்கவே ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும்; நாங்கள் அதற்கு முன்னோட்டமாக தடை செய்கிறோம். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியா, அண்ணாமலையா எனவும் கேள்வி எழுப்பினார். மசோதா குறித்து ஆளுநர் என்னென்ன சந்தேகங்கள் கேட்டார் என்று அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அரசின் ரகசியங்களை அண்ணாமலையிடம் தெரிவித்தாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? ஆன்லைன் சூதாட்ட நிறுவன அதிகாரிகளை ஆளுநர் அழைத்துப் பேசியது சரியா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

Related Stories: