சம்பள நிலுவைத்தொகை வழங்கப்படும்!: டாஸ்மாக் நிர்வாகத்தின் உறுதியானால் மீண்டும் மதுபான விநியோகம் தொடங்கியது..!!

சென்னை: நிலுவைத்தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் உறுதி அளித்துள்ளதால் மதுபானங்களை ஏற்றிச்செல்லும் வாகன உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் டாஸ்மாக் கிடங்கு அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து மதுபானங்கள் லாரிகள் மூலம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 350க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனை அரசு மதுபான கடைகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு டாஸ்மாக் நிறுவனம் நான்கரை மாத வாடகை ரூ.4.75 கோடியை செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

பணம் தராததால் மதுபானம் கொண்டுசெல்ல டிரான்ஸ்போர்ட் நிறுவனம் வாகனங்களை வழங்காமல் இருந்தது. இதனால் திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் மதுபானங்களை ஏற்றிச்செல்லும் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக 350க்கும் மேற்பட்ட டாஸ்மாக், 120 நட்சத்திர ஓட்டல்களுக்கு மதுபானம் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், சம்பள நிலுவைத்தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் உறுதி அளித்துள்ளதால் மதுபானங்களை ஏற்றிச்செல்லும் வாகன உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விநியோகம் தற்காலிகமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் நிலுவை தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்திலும் டாஸ்மாக் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. லாரிகள், தொழிலாளர்கள் பணிகளை தொடங்கியதால் டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் மது விநியோகம் தொடங்கியது. நிலுவைத் தொகையை வழங்கத் தவறினால் நாளை மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: