தமிழக முதல்வரிடம் தேங்காய் பட்டணத்தில் துறைமுக விரிவாக்கப் பணிகள்: விஜய் வசந்த் எம்பி மனு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது அவரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து பேசினார். அப்போது முதல்வரிடம் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பில் ஒரு கோரிக்கை மனுவை வழங்கி, அவற்றை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தினார். அம்மனுவில், தேங்காய் பட்டணத்தில் நடைபெற்று வரும் துறைமுக விரிவாக்கப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

வரும் பருவமழைக்கு முன் அப்பணிகளை முடித்தால், அது மீனவ மக்களுக்கு பாதுகாப்பாக அமையும். அதேபோல், கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் கடல் நீர் உள்புகுவதை தடுக்க தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும். மேலும், இப்பகுதி விவசாயிகள் நலன் கருதி, நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு கேரள அரசுடன் சுமூகமாக பேசி தீர்வு காணவேண்டும். மேலும், தமிழ்நாடு வனத்துறை சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, ரப்பர் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும்.

இங்கு 25 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ரப்பர் மரங்களை வெட்டி மாற்றுவதற்கு கேரள அரசை போல், தமிழ்நாட்டிலும் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். குமரி மாவட்ட சிறார், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விளையாட்டு போட்டிகளில் தங்களின் திறனை மேம்படுத்த, இங்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் கட்டித் தரவேண்டும். மேலும், இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், இங்கு ஒரு தொழில்நுட்பவியல் பூங்கா அமைத்து தரவேண்டும் என விஜய் வசந்த் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: