கடை மூடிய பிறகு மதுபானம் கொடுக்காததால் ஆத்திரம்; டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: வளசரவாக்கத்தில் போதை ஆசாமி கைது

பூந்தமல்லி: கடையை மூடிய பிறகு மதுபானம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு விற்பனை முடிந்த பிறகு கடையை ஊழியர்கள் மூடியுள்ளனர். அப்போது, பைக்கில் போதையில் வந்த ஆசாமி, 100 ரூபாய் கொடுத்து குவார்ட்டர் மதுபான பாட்டில் கேட்டுள்ளார்.

கடையை மூடிவிட்டதால் மதுபானம் கொடுக்க முடியாது என கடை ஊழியர் ராஜேந்திரன்(43) கூறியுள்ளார். இதனால் இருவர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஆசாமி, பக்கத்து தெருவிற்கு சென்று, பைக்கில் இருந்த பெட்ரோலை காலி மதுபாட்டிலில் பிடித்துக்கொண்டு மீண்டும் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். பின்னர், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீப்பற்ற வைத்து டாஸ்மாக் கடை மீது வீசியுள்ளார். பெட்ரோல் பாட்டில் கடை ஷட்டர் மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள், மண் மற்றும் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துவிட்டு  ஆசாமியை மடக்கி பிடித்து தர்மஅடி ெகாடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த வளசரவாக்கம் போலீசார் போதை ஆசாமியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், சின்னப்போரூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கதிரவன் (32) என்பதும், போரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மதுபோதைக்கு அடிமையான ஆசாமி, கடை மூடிய பிறகு மதுபானம் கொடுக்காத ஆத்திரத்தில் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

Related Stories: