திருவண்ணாமலை அருகே இன்று டோல்கேட்டை மூடக்கோரி மா.கம்யூ. முற்றுகை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே விதி மீறி இயங்கும் டோல்கேட்டை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முற்றுகையிட்டனர். திருவண்ணாமலை அருகே வேலூர் சாலையில் உள்ள இனாம்காரியந்தல் பகுதி மற்றும் கண்ணமங்கலம் அருகே உள்ள வல்லம் பகுதிகளில் 2 டோல்கேட்கள் உள்ளன. நகராட்சி எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள் டோல்கேட் இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால் இனாம்காரியந்தல் பகுதியில் திருவண்ணாமலை நகராட்சிக்கு 5 கிலோ மீட்டர் தூரத்திலேயே டோல்கேட் அமைத்துள்ளனர்.

சாலையை மேம்படுத்தாமல் அவசர கதியில் இந்த டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வருகின்றனர். அவர்களை குறி வைத்தே இந்த டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டோல்கேட்களில் கடந்த 6 மாதங்களாக வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை அகற்றக்கோரி ஏற்கனவே திமுக சார்பில் எம்.பி. எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மனுக்கள் அளித்தனர். இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.

இருப்பினும் டோல்கேட் அகற்றாமல் ஒன்றிய அரசு பிடிவாதமாக உள்ளது. இந்நிலையில் இனாம்காரியந்தல் பகுதியில் உள்ள டோல்கேட்டை அகற்றக்கோரி இன்று காலை 10 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது டோல்கேட்டை முற்றுகையிட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் கோஷமிட்டனர்.

Related Stories: