கேரள விஷம பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி; பெரியாறு அணை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை: அதிர்வலைகள் ஆய்வில் தகவல்

கூடலூர்: பெரியாறு அணை சுற்றுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என தேசிய புவியியல் ஆய்வு மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கேரள அரசு தொடர்ந்து நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வால் பெரியாறு அணைக்கு பாதிப்பு உள்ளது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வருகிறது. எனவே, அணையில் நில அதிர்வுமானிகள் பொருத்த மேற்பார்வைக்குழு முடிவு செய்தது. இதையடுத்து பெரியாறு அணையின் மேல்பகுதி, கேலரிப்பகுதி மற்றும் கேம்ப்காலனி ஆகிய 3 இடங்களில் நிலநடுக்க அளவீட்டு கருவி (சீஸ்மோகிராப்) மற்றும் அதிர்வுக்கருவிகள் (ஆக்சலரோகிராப்) பொருத்த முடிவு செய்து, கடந்த பிப்.23ல் தேசிய புவியியல் ஆய்வு மைய முதுநிலை முதன்மை விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில், பெரியாறு அணையின் மேல்பகுதியில் சீஸ்மோகிராப் கருவி பொருத்தப்பட்டது.

நிலநடுக்க அளவீட்டு கருவி (சீஸ்மோகிராப்) என்பது நிலத்தில் ஏற்படும் சலனம் அல்லது இயக்கத்தை அளவிட உதவும் கருவி ஆகும். நிலநடுக்கம், எரிமலை உமிழ்வு மற்றும் வெடிபொருள்களை பயன்படுத்துதல் போன்ற பிற நில அதிர்ச்சி மூலம் நிலத்தில் சலனம் அல்லது இயக்கம் ஏற்படுவதை இக்கருவி பதிவு செய்யும். தற்போது பெரியாறு அணையின் மேல் பகுதியில் பொருத்தப்பட்ட சீஸ்மோகிராப் கருவியில் பதிவான அதிர்வலைகள், செயற்கைக்கோள் மூலமாக ஐதராபாத்தில் உள்ள ஒன்றிய அரசின் தேசிய புவியியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வரைபடமாக கிடைக்கிறது.

கடந்த 2 வாரங்களில் பெரியாறு அணையில் பொருத்தப்பட்ட சீஸ்மோகிராப் கருவியில் பதிவான அதிர்வலைகள் மூலம், பெரியாறு அணை சுற்று வட்டாரப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகளே இல்லை என தெளிவாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இரு வாரங்களுக்கு முன் அணையின் மேல்பகுதியில் நிலநடுக்க அளவீட்டு கருவி பொருத்தப்பட்டு அதனுடைய அதிர்வலைகள் செயற்கைக்கோள் மூலமாக ஐதராபாத்தில் உள்ள ஒன்றிய அரசின் தேசிய புவியியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதில் பெரியாறு அணை சுற்றுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என தெளிவாக தெரிய வந்துள்ளது. கேலரிப்பகுதி மற்றும் கேம்ப் காலனி பகுதியில் ஆக்சலரோகிராப் கருவிகள் பொருத்தும் பணி இம்மாத இறுதிக்குள் முடிவுபெறும்,’’ என்றனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘தற்போது இருவார அதிர்வலை ஆய்வில், அணை சுற்றுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்பது கேரளாவின் பொய் பிரசாரத்துக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளியாகும்’’ என்றார்.

Related Stories: