திருவொற்றியூர் 7வது வார்டில் அபாய நிலையில் நீண்டிருக்கும் இரும்பு கம்பிகள்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டுக்கு உட்பட்ட கிளாஸ் பேக்டரி சாலை மற்றும் கேசிபி சாலையை இணைக்கும் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. எனினும், அப்பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மேலும், அந்த கால்வாயை இணைக்காமல் அப்படியே விட்டுள்ளதால், கால்வாயின் மேலே துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே நீண்டிருக்கின்றன.

இதனால் அவ்வழியே பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு முதியவர்கள் சாலையோரமாக நடந்து செல்லும்போது, அந்த இரும்பு கம்பியில் உடைகள் சிக்கி, அவர்களின் உடலை கிழிக்கும் நிலை உள்ளது. இப்பணி முழுமை பெறாததால், அங்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும்போது, வெளியே நீண்டிருக்கும் இரும்பு கம்பிகள் குத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயநிலை உள்ளது.

இதேபோல், நேற்று காலை மொபெட்டில் சென்ற பெண்ணின் மேல்துப்பட்டா, இந்த இரும்பு கம்பியில் சிக்கியதால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். எனவே, 7வது வார்டு பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகளை முழுமையாக முடித்து, வெளியே நீண்டிருக்கும் இரும்பு கம்பிகளை அகற்றி, சாலையை சீரமைக்க மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: