வியாசர்பாடி, கொருக்குப்பேடடை மேம்பால பணி தொடக்கம் மக்கள் பிரச்னைகளை உடனடியாக தீர்ப்பது தான் என் முதல் வேலை: அமைச்சர் உதயநிதி பேச்சு

சென்னை: வியாசர்பாடி கணேசபுரம், கொருக்குப்பேட்டையில் மேம்பால பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, மக்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் உடனடியாக தீர்ப்பது தான் என் முதல் வேலை என்று அவர் கூறினார்.சென்னை வியாசர்பாடி கணேசபுரம், ரயில்வே சுரங்க பாலத்தில் மழைக்காலங்களில் வாகனங்கள் பாலத்தில் மாட்டிக் கொள்வதால் உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வரால் ரூ.142 கோடியில், 18 மாதங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல், கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில், ரூ.106 கோடி செலவில் கொருக்குப்பேட்டை எல்.சி 2 ரயில்வே மேம்பாலம் கட்ட ரயில்வே துறையும் மாநகராட்சியும் இணைந்து ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, 2 மேம்பால கட்டுமான பணிகளையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் பணியை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலின்போது, பொதுமக்கள் இந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் இந்த பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 24 மாதங்களில் பாலம் கட்டி முடிக்கப்படும். இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இங்கு கூடி உள்ள அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

மகளிருக்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்து வருகிறார். இன்று மட்டும் மகளிர் தினம் அல்ல, தினந்தோறும் மகளிர் தினம்தான். இந்த பகுதி மக்கள் தேர்தலின்போது கேட்ட வாக்குறுதியை தற்போது நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். மக்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் உடனடியாக தீர்ப்பது எங்களின் முதல் வேலை. இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்பி கலாநிதி வீராசாமி ஏற்பாட்டில் ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர், திரு.வி.க. நகர், கொளத்தூர் ஆகிய தொகுதியை சேர்ந்த தலா 1000 பேர் வீதம் 6000 பேருக்கு ஹெல்மெட், புத்தாடை, கடிகாரம் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

* மேம்பாலத்தால் போக்குவரத்து மாற்றம் கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் மேம்பால பணி தொடங்கியுள்ள காரணத்தால் கொடுங்கையூர், வியாசர்பாடி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தொப்பை விநாயகர் கோயில் தெரு வழியாக சென்று தண்டையார்பேட்டை ஐஓசி வேலூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் வகையிலும், அதேபோல் திருவொற்றியூர் தண்டையார்பேட்டை பகுதியிலிருந்து செல்லும் வாகனங்கள் இதே வழியாக வியாசர்பாடி செல்லும் வகையிலும் போக்குவரத்து போலீசார் மாற்று பாதை அமைத்துள்ளனர்.

Related Stories: