திகார் சிறையில் சிசோடியாவிற்கு தியான அறை வழங்க மறுப்பு: ஆம் ஆத்மி புகார்

புதுடெல்லி:  டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு தியான அறை வழங்க திகார் சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக  அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை வருகிற 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக திகார் சிறையில் தியான அறை ஒதுக்கும்படியும் சிசோடியா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றமும் அவருக்கு தியான அறை ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் சிறை நிர்வாகம், நீதிமன்ற உத்தரவை பரிசீலிக்காமல் சிசோடியாவை குற்றவாளிகள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை எண்-1ல் அடைத்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‘‘மணீஷ் சிசோடியா சிறையில் விபாசனா அறையை அனுமதிக்கும்படி  கேட்டுக்கொண்டார். நீதிமன்றமும் இதற்கு அனுமதித்த நிலையில் அவருக்கு சிறை எண்1 ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

Related Stories: