நெல்லை- தாம்பரம் வாராந்திர ரயில் ஏப். 2 முதல் மீண்டும் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை: தென் மாவட்ட ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மீண்டும் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் மாதம் வரை இயக்கப்பட உள்ளது. நெல்லை ரயில் நிலையத்தில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை கொண்டு சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில் கடந்தாண்டு இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. நெல்லை - தாம்பரம், நெல்லை - மேட்டுபாளையம் ஆகிய இரு சிறப்பு ரயில்களும் தென்காசி மார்க்கமாக இயக்கப்பட்டன.

கடந்த செப்டம்பர் முதல் ஜனவரி வரை நெல்லை - தாம்பரம் ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும், தாம்பரம் - நெல்லை எக்ஸ்பிரஸ் திங்கள்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. அதேபோல் செப்டம்பர் முதல் ஜனவரி வரை வியாழக்கிழமை தோறும் நெல்லை - மேட்டுப்பாளையம், வெள்ளிக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம் - நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில்களாக சென்றன.

இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது. இவ்விரு சிறப்பு ரயில்கள் மூலம் 5 மாதங்களில் மொத்தம் ரூ.3.7 கோடி வருமானம் தெற்கு ரயில்வேக்கு கிட்டியது. மேலும் மொத்தம் 67 ஆயிரத்து 679 பயணிகள் இந்த வாராந்திர ரயில்களில் பயணித்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டபோது பயணிகள் சங்கத்தினர் இவ்விரு ரயில்களை இயக்கிட கேட்டுக் கொண்டனர். அதன்பேரில் தெற்கு ரயில்வே நெல்லை - மேட்டுப்பாளையம் இயக்கத்திற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டு விட்டது.

இந்நிலையில் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரயிலும் அடுத்த மாதம் முதல் இயக்கப்பட உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நெல்லை- தாம்பரம் சிறப்பு ரயில் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை தோறும் இரவு 7.20 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கமாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை திங்கள் கிழமை தோறும் இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுதினம் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தென்காசி மார்க்கத்தில் சென்ற இரு ரயில்கள் மீண்டும் ஏப்ரல் மாதம் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: