தமிழ்நாட்டில் பாஜகவின் பிரிவினைவாதம் எடுபடாது: கே.எஸ்.அழகிரி பேச்சு

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில் “ வென்று நிலைத்திருக்கும் என்றும் நல்லிணக்கம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொளத்தூர் அகரம் சந்திப்பில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கொளத்தூர் மேற்கு பகுதி  செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார்.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.ஐ மாநில துணைச் செயலாளர் கே.சுப்புராயன், கலாநிதி வீராசாமி எம்பி, முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேசியதாவது; இந்தியாவின் அரசியல் நிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூர்ந்து கவனிக்கிறார். தொடர்ந்து நல்ல முடிவுகளை எடுக்கிறார். ஒரு விஷயத்தை நிதானமாக அணுகும் திறன் படைத்தவர் முதலமைச்சர். 2 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை விட அதிகமாக தமிழக அரசு மக்களுக்கு செய்துள்ளார். ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் சகஜம்தான். ஆனால் இந்திய சமூகத்தின் 5000 ஆண்டுகால சக்கரத்தை பின்னோக்கி செலுத்துகிறார்கள் பிஜேபி. தீண்டாமை, வறுமை, வர்ண பாகுபாடு என்று அனைத்தையும் மீண்டும் நிலைப்படுத்த பார்க்கிறார்கள்.

எங்களது கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. கொள்கைகள் வேறு தான், வரலாறும் வேறு தான், ஆனால் மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் ஒன்று படுகிறோம். பாஜகவின் பிரிவினைவாதம் விளம்பரத்திற்குத்தான் எடுபடும். ஆனால் தமிழ்நாட்டில் அது எடுபடாது. இவ்வாறு அழகிரி பேசினார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, ‘’இந்தியாவுக்கு  வழிகாட்டக்கூடிய ஒளிச்சுடராக ஸ்டாலின் இப்போது திகழ்கிறார். வருகின்ற  நாடாளுமன்ற ேதர்தலில் தமிழ்நாடு முக்கிய இடத்தை பிடிப்பதால் அதனை தடுக்க வடமாநிலத்தவர் மீது தாக்குதல் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.

12 மாத கால பேறுகால விடுப்பு, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பேருந்து கட்டணம் என்று பெண்களுக்கு தனித் திட்டங்களை வகுத்து வருகிறார் முதலமைச்சர்.  மக்களை தேடி மருத்துவம் போன்று மக்கள் பெருமைப்படும் அளவிற்கு முதலமைச்சர் தமிழ்நாட்டை வைத்திருக்கிறார். பிஜேபி வகுப்புவாதத்தை தூண்டிவிட்டு புதிய அரசியல் சட்டத்தை கொண்டு வரப் பார்க்கிறார்கள். செயல்  திட்டங்கள் சுற்றுப்பயணம் என்று ஓய்வறியா உத்தம தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார். அவர் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். இந்தியாவை பாதுகாக்க  வேண்டும்’’என்றார். இந்த கூட்டத்தில், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டில்லிபாபு, செயலாளர் அகரம் கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: