திருத்தணி நகரம், புறநகர் பகுதிகளில் சாலை விபத்துக்களை தடுக்க 5 இடத்தில் பாதுகாப்பு வேலி

திருத்தணி: திருத்தணி நகரம், புறநகர் பகுதிகளில் வாகன விபத்துக்களை தடுக்க ஐந்து இடங்களில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் கார், வேன், ஆட்டோ மற்றும் பேருந்துகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவித்ததுடன் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைவதுடன் உயிரிழப்புகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் சாலை விதிகளை பின்பற்றாமலும் சிக்னல் முறையாக இல்லாத காரணத்தாலும் விபத்துக்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி. பா.சிபாஸ் கல்யாண் உத்தரவின்படி, திருத்தணி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன விபத்துக்களை குறைக்க நடவடிக்கையும் இதுதொடர்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தடுப்புகள் அமைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதன்படி திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கூட்டுச்சாலை, பழைய ஆர்டிஓ அலுவலக சந்திப்பு சாலை, தரணிவராகபுரம், முருகம்பட்டு மற்றும் பொன்பாடி சோதனை சாவடி என 5 இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வாகன விபத்துகளை தடுக்கமுடியும் என்றும் வாகனங்களில் வேகமாக செல்வது பெருமளவில் குறையும் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: