ஆந்திராவில் விறுவிறுப்படையும் எம்எல்சி தேர்தல் வேலையில்லா இளைஞர்கள், பட்டதாரிகள் தெலுங்கு தேசத்துக்கு வாக்களிக்க வேண்டும்-கட்சியினர் வீடு வீடாக ஆதரவு திரட்டினர்

சித்தூர் : ‘வேலையில்லா  இளைஞர்கள், பட்டதாரிகள் தெலுங்கு தேசத்துக்கு வாக்களிக்க வேண்டும்’ கட்சியினர் வீடு வீடாக ஆதரவு திரட்டினர். இதனால், ஆந்திராவில் எம்.எல்.சி. தேர்தல் விறுவிறுப்பு அடைந்துள்ளது.சித்தூர் தெலுங்கு தேச கட்சி மாவட்ட இளைஞர் அணி  தலைவர் ராஜேஷ் தலைமையில் பட்டதாரிகள் இருக்கும் வீடுகளுக்கு நேற்று நேரடியாக சென்று எம்எல்சி தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களில் பலர் வாக்களிப்பதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தெலுங்கு தேச கட்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேஷ் தெரிவித்ததாவது:

 ஆந்திர மாநிலத்தில் 18 எம்எல்சி பதவிகளின் காலம் நிறைவடைய உள்ளதால் ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை எம்எல்சி பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாதம் 13ஆம் தேதி எம்எல்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

 மொத்தம் மூன்று விதமான எம்எல்சி பதவிகளுக்கு அதாவது படித்த பட்டதாரிகள் வாக்களிக்கும் எம்எல்சி பதவி, ஆசிரியர்கள் வாக்களிக்கும் எம்எல்சி பதவி, பஞ்சாயத்து தலைவர்கள் வாக்களிக்கும் எம்எல்சி பதவி என மூன்று விதமான எம்எல்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கு தேச கட்சி சார்பில் பட்டதாரிகள் வாக்களிக்கும் எம்எல்சி பதவிக்கு கஞ்சர்ல்லா காந்த் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக தெலுங்கு தேச கட்சி சித்தூர் மாவட்ட இளைஞரணி சார்பில் படித்த இளைஞர்கள் வீடுகளுக்கு சென்று தெலுங்கு தேச கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3000 உதவித்தொகை வழங்கி வந்தார். ஆனால் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி தோல்வியை தழுவியது.

 ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு மாதா மாதம் வழங்கும் ₹3000 உதவித்தொகையை நிறுத்திவிட்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதேபோல் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் ஆக இருந்தபோது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என கொண்டு வந்தார்.

 இதனால் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது ஆனால்  ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் ஒன்று கூட ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வரவில்லை. இருக்கிற தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி, தனியார் நிறுவனங்களிடம் பங்குகள் கேட்பதால் அவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்கிறார்கள். இதனை கட்டுப்படுத்த படித்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் அனைவரும் தெலுங்கு தேச கட்சி எம்எல்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

அப்போதுதான் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு முறை செய்த தவறை மீண்டும் மீண்டும் படித்த இளைஞர்கள் யாரும் செய்ய வேண்டாம் என தெலுங்கு தேச கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஏராளமான தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள், இளைஞரணி தலைவர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: