வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை பாபநாசம் செக்போஸ்டில் பக்தர்கள் மறியல்-போலீசார், இசக்கிசுப்பையா எம்எல்ஏ பேச்சுவார்த்தை

விகேபுரம் : வனப்பேச்சியம்மன் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்ததால் ஆவேசமடைந்த பக்தர்கள் பாபநாசம்  செக்போஸ்ட்டில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த இசக்கிசுப்பையா எம்எல்ஏ மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.  நெல்ைல மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலை காரையாறில் உள்ள வனப்பேச்சி அம்மன் கோயிலில் கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதல் கோயிலுக்கு பல்வேறு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். பாபநாசம் முண்டந்துறையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருவதால் வனத்துறை விதிகளின்படி மாலை 3 மணி மேல் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரையும் வாகனங்களில் செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை.

 இருப்பினும் கொடை விழாவிற்கு செல்ல விரும்பிய பக்தர்கள் காரையாறுக்கு இரவு சுமார் 7.30 மணிக்கு செல்லும் அரசு பஸ்சில் செல்ல முடிவு செய்து பஸ்சில் ஏறிசெல்ல முயன்றனர். ஆனால், பாபநாசம் வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்த வனத்துறையினர்  பஸ்சில் இருந்த பக்தர்களை கீழே இறக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆவேசமடைந்த பக்தர்கள் சோதனைச்சாவடி முன்பாக தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த இசக்கிசுப்பையா எம்எல்ஏ, விகேபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் பாபநாசம் வனவர் ஜெகன் உள்ளிட்டோர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு வந்த ஏஎஸ்பி பல்பீர்சிங், எம்எல்ஏவுடன் பேசிக் கொண்டிருந்தபோதே போலீசாரை பார்த்து லத்தி வைத்திருக்கிறீர்களா? எனக்கேள்வி கேட்டார். இதனால் வெகுண்டெழுந்த இசக்கிசுப்பையா எம்எல்ஏ, ஏன் இப்படி பேசுகிறீர்கள்? மறியலில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது லத்தியால் தாக்குவதாக இருந்தால் முதலில் என் மீது தாக்குதல் நடத்துங்கள் என்றார்.

இதனால் ஏஎஸ்பி பல்பீர்சிங், இசக்கிசுப்பையா எம்எல்ஏ இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விளக்கமளித்த ஏஎஸ்பி பல்பீர்சிங், பொதுவாக போலீசார் லத்தி வைத்திருப்பது அவர்களது கடமை என்பதால் அவ்வாறு கேட்டதாகவும், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றார். இருப்பினும் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் இரவு 11 மணியை கடந்தபிறகும் விடிய விடிய மறியல் போராட்டம் நீடித்தது. சமாதானப் பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது.

Related Stories: