முதுகுளத்தூர்,சாயல்குடி பகுதியில் தண்ணீரின்றி கருகிய மிளகாய் பயிர்கள்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சாயல்குடி : முதுகுளத்தூர்,கமுதி,சாயல்குடி பகுதியில் மிளகாய் பயிர்கள் தண்ணீரின்றி கருகி, சோடையானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய தாலுகாக்களில் நெற்பயிருக்கு அடுத்தப்படியாக மிளகாய் பயிரிடப்படுகிறது. சம்பா மிளகாய், நாட்டு மிளகாய், குண்டு மிளகாய் அதிகமாக பயிரிடப்படுகிறது. இந்தாண்டு முதுகுளத்தூர் வட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர், கடலாடி வட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர், கமுதியில் 3 ஆயிரம் ஏக்கரில் பருவ மழையை எதிர்பார்த்து கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. பயிர்கள் நன்றாக வளர்ந்து பூ பூத்து மிளகாய் காய்த்தது.

இந்நிலையில் தொடர் மழை மற்றும் கண்மாய், குளம், பண்ணைக்குட்டை போன்ற நீர்நிலைகளும் வறண்டது. முதுகுளத்தூர் வட்டத்தில் கீழத்தூவல், பொசுக்குடி, பட்டி, புளியங்குடி, காக்கூர், வெங்கலகுறிச்சி, விளங்குளத்தூர், உடைகுளம், நல்லூர், ஆரபத்தி, ஆத்திக்குளம், கீரனூர், மைக்கேல்பட்டிணம், சாம்பக்குளம், கீழகன்னிச்சேரி, பாரப்பத்தி என 60க்கும் மேற்பட்ட கிராமங்கள்.

கடலாடி வட்டத்தில் இளஞ்செம்பூர், பூக்குளம், சவேரியார்பட்டிணம், மேலச்சிறுபோது, சிக்கல்,இதம்பாடல், டி.எம்.கோட்டை, கொக்கரசன்கோட்டை, முத்துராமலிங்கபுரம், உச்சிநத்தம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள், கமுதி வட்டத்தில் நெறிஞ்சிப்பட்டி, கோவிலாங்குளம்,இலந்தைக்குளம், பேரையூர்,சாமியாடிபட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 5ஆயிரம் ஏக்கரில் மிளகாய் காய்த்து பழமாகிய நிலையில் கருகி வருகிறது. இதனால் சோடை வத்தலை பறித்து பெரும் நஷ்டத்தில் போகின்ற விலைக்கு விற்று வருகின்றனர்.

இதுகுறித்து நல்லூர், கீரனூர் விவசாயிகள் கூறுகையில், போதிய மழை, தண்ணீர் இல்லாதபோது டேங்கரில் விலைக்கு வாங்கி தண்ணீர் ஊற்றி மிளகாய் நாற்றுகளை வளர்த்து வந்தோம். வயலில் செடிகள் நடப்பட்டு நன்றாக வளர்ந்து வந்த நிலையில் அப்போது பெய்த தொடர் மழையின் காரணமாக மிளகாய் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. இதனையடுத்து பருவமழை மற்றும் பண்ணைக்குட்டை, கண்மாயில் கிடந்த தண்ணீரை நம்பி மீண்டும் நாற்றுகளை விலைக்கு வாங்கி வந்து நடப்பட்டு, களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை செய்து வந்தோம்.

காலம் கடந்து பயிரிடப்பட்டதால் அடுத்தக்கட்ட மழையின்றி பயிர்கள் வாட துவங்கியது. போர்வெல் சவறு தண்ணீரை பயன்படுத்தி விட்டோம். ஆனால் பயிர்கள் வளரவில்லை. இரண்டு மடங்கு செலவு செய்து பயிரிடப்பட்டு, பராமரிக்கப்பட்ட பயிர்கள் தற்போது காய் காய்த்து பழமாகி பறிக்கும் நிலையில் தண்ணீரின்றி கருகி வருகிறது. இதனால் சோடை வத்தலை பறிக்கும் நிலை ஏற்பட்டு, கால்வாசி விலைக்கு விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது.எனவே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யப்பட்ட மிளகாய் பயிருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: