சென்னை: ‘‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’’ என்ற சொல்லாடலின்படி, வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாது, மனதிலுள்ள கசப்புகளையும் நீக்கி புதிய வாழ்வை தொடங்கும் விதமாக பண்டைய காலம் தொட்டு தமிழர் திருநாளாம் பொங்கலை வரவேற்கும் விதமாக போகி பண்டிகை, தை திருநாளுக்கு முன்னதாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழகம் முழுவதும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அதிகாலை போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பனி மூட்டம் அதிகாலை நேரங்களில் எப்போதும் இல்லாத அளவில் இருந்த நிலையில் போகி பண்டிகையையொட்டி எரிக்கப்பட்ட பழைய பொருட்கள், டயர் , பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றால் பனி மூட்டத்துடன், புகை மூட்டமும் ஒன்று சேர்ந்ததால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் புகை மண்டலமாக சென்னை மாநகரம் காட்சியளித்தது.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு உதவியுடன் வாகனத்தை ஓட்டி சென்றனர். குறிப்பாக, சென்னை பெருங்குடி, கொடுங்கையூர், வேளச்சேரி, ராயபுரம் மற்றும் வடபழனி பகுதிகளில் கடுமையான பனி மற்றும் புகை மூட்டம் இருந்தது. போகி பண்டிகையால் எரிக்கப்பட்ட பொருட்களில் இருந்து வெளியான புகை காரணமாக தமிழகம் முழுவதும் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு 595 என்ற ஆபத்தான அளவுக்கு சென்றுள்ளது.
சென்னையின் பல பகுதிகளிலும் காற்று சுவாசிக்கப் பொருத்தமாக இல்லை என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. அதேபோல் காற்றின் தரக்குறியீடு மணலி – 140, எண்ணூர் – 116, கொடுங்கையூர் – 107, அரும்பாக்கம் – 111, வேளச்சேரி 76 ஆக பதிவாகி உள்ளன. மேலும், பெருங்குடி – 100, ராயபுரம் – 52 பதிவாகி உள்ளன. தமிழகத்திலேயே அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் தான் 196 ஆக காற்றுமாசு பதிவை எட்டியுள்ளது.
குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் 9 மணி வரை காட்டு பனியுடன் மாசுப்பொருட்கள் கலந்ததால் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், கண்களில் எரிச்சல், தொண்டையில் வலி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டதன் காரணமாக அதிகாலை மின்சார ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. அதேபோல், 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* புகைமூட்டம் காரணமாக 14 விமானங்கள் ரத்து: 30 விமானங்கள் ‘லேட்’
சென்னை விமான நிலையத்தில் போகிப் பண்டிகை புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 7 மணி வரை, சென்னை விமான நிலையத்தில், 8 வருகை, புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கொச்சி, பெங்களூரு, மும்பை ஆகிய 3 புறப்பாடு மற்றும் 3 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று 14 விமானங்கள் ரத்து செய்யப்
பட்டுள்ளன.
அதேபோல், நேற்று காலை 7 மணி வரையில் 10 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்ட நிலையில், பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத், அகமதாபாத், கொழும்பு, புனே, கொல்கத்தா உள்ளிட்ட 10 வருகை விமானங்கள், அந்தமான், பெங்களூர், மும்பை, கோவை, திருவனந்தபுரம், ஹைதராபாத், புனே, சிலிகுரி உள்ளிட்ட 10 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 30 விமானங்கள் 3 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமாக இயக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் போகி பனிமூட்டம், புகைமூட்டம் காரணமாக மொத்தம் 44 விமான சேவைகள், பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2025ம் ஆண்டு, போகி பனிமூட்டம், புகைமூட்டம் காரணமாக, மொத்தம் 30 விமான சேவைகள், பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 44ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
