கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும். எனினும், தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

   

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு 24X7 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. மேலும், ஆய்வுக் கூட்டத்தில் இயக்கத்தில் உள்ள 5 அனல் மின் நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டதில் தற்சமயம் 5 அனல் மின் உற்பத்தி நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 7,99,124 மெட்ரிக் டன் நிலக்கரி 11 நாட்களுக்கு கையிருப்பில் இருக்கிறது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்த நிலக்கரியின் கையிருப்பு அளவு 1,82,555 மெட்ரிக் டன் மட்டுமே.  இந்த மாதம் அதிக கொள்ளவு கொண்ட 12 பெரிய கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கோடைகால மொத்த மின்தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு கோடைகாலத்திலும் தடையில்லா  மின்சாரம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: