மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நேர்மையாக வழிகாட்ட வேண்டும்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் பேச்சு

சென்னை: விஐடி பல்கலைக்கழக குழுமத்தின் அங்கமான வேலூர் சர்வதேச பள்ளி, சென்னையை அடுத்து கேளம்பாக்கம், காயார்  பகுதியில்  கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.  வேலூர் சர்வதேச பள்ளியின் முதலாமாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: பள்ளி பருவத்திலே குழந்தைகள் சகிப்புத்தன்மை, அனுதாபம், சரியான முடிவு எடுத்தல், மனிதநேயம்,  மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் மற்றும் பணிவை வளர்த்து கொள்ளவேண்டும்.  குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தேர்வை கண்டு அஞ்சக்கூடாது.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது சரியாக கவனிக்கவேண்டும். நம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் தேர்வில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெறலாம். ஒரு செயலை செயல்படுத்துவதற்கு முன்பு மற்றவர்களின் கருத்துக்களை கேட்கவேண்டும். குழந்தைகளை பள்ளிப்பருவத்திலே பணிவோடு வளரவேண்டும். மாணவர்கள் சரியான முடிவை எடுக்கும் திறனை வளர்த்துகொள்ளவேண்டும்.  வாழ்வில் பல்வேறு கடினமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். மாணவர்கள் சரியான முடிவு எடுக்கும் திறனை மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வேலூர் சர்வதேச பள்ளி தலைவரும் விஐடி துணைத்தலைவருமான  ஜி.வி.செல்வம் தலைமை வகித்து பேசுகையில், “வேலூர் சர்வதேச பள்ளியின் நிர்வாகம், பள்ளி குழந்தைகள் நாட்டின் சிறந்த குடிமகனாக வளர கடினமாக உழைக்கிறது. 6 வருட கடின முயற்சிக்கு பின்பு அனைத்து அம்சங்களுடன் வேலூர் சர்வதேச பள்ளி உருவானது.  பல்வேறு நாடுகளுக்கு சென்று பல்வேறு பள்ளிகளை பார்வையிட்ட பிறகுதான் வேலூர் சர்வதேச பள்ளி உருவாக்கப்பட்டது” என்றார்.

முன்னதாக, கலை மற்றும் விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பரிசு வழங்கினார்.  விழாவில், பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்  அனுஷாசெல்வம்,  பள்ளி இயக்குனர் சஞ்சீவி,  ஆலோசகர் சீனிவாசன்,  பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: