பாஜவில் இருந்து வெளியேறிய ஐடி விங் செயலாளரும் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்

சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறிய ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணனும் நேற்று எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். தமிழக பாஜ ஐடி விங்க் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இருந்து வெளியேறினார். பின்னர் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனால், அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருந்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜவில் இணைந்தவர்கள் மற்றும் பாஜகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் நடவடிக்கையில் எடப்பாடி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தமிழக பாஜ ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணன் நேற்று முன்தினம் பாஜகவில் இருந்து விலகினார். அவரும் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை தெரிவித்தார்.

பாஜவில் இருந்து விலகிய திலிப் கண்ணன் நேற்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். மேலும் பாஜ ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதியும் அதிமுகவில் இணைந்தார். இதே போல திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் டி.விஜயும் அதிமுகவில் இணைந்தார். அப்போது அண்மையில் அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பாஜவில் இருந்து வெளியேறுபவர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருவது பாஜ தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: