‘அநாமதேய’ ஜனநாயகம் வாழ்க பாஜ தேர்தல் வருமானம் குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்

புதுடெல்லி: பாஜவின் தேர்தல் வருமானம் குறித்து, ‘அநாமதேய ஜனநாயகம் வாழ்க’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 8 தேசிய கட்சிகள் 2021-22ம் ஆண்டுக்கான கட்சியின் வருமானம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணைத்திடம் சமர்ப்பித்துள்ளன. அதன்படி பாஜவின் வருமானம் ரூ.1,917.12 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 8 தேசிய கட்சிகளின் வருமானத்தில் பாதிக்கும் மேல் என்பதும், கடந்த 2020-21ம் ஆண்டில் பாஜவுக்கு கிடைத்த வருமானத்தை விட ரூ.154 கோடி அதிகம்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுவரை ரூ.12,000 கோடிக்கும் மேல் தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை கார்ப்பரேட் நிறுவனங்களால் வாங்கப்பட்டு, பெயர் குறிப்பிடப்படாமல் பாஜவுக்கு தேர்தல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜனநாயகத்தை பெரிதும் நேசிப்பதால்தான், வௌிப்படையற்ற தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க ஆர்வமாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் நன்கொடை என்பது கடந்த காலங்களில் அரசு தங்களுக்கு வழங்கிய சலுகைகளுக்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வழி. இதுஒரு நேர்த்தியான ஏற்பாடு. அமைதியாக உதவிகள் செய்யப்பட்டு, வெகுமதிகள் ரகசியமாக பெறப்படுகின்றன. எங்கள் அநாமதேய ஜனநாயகம் வாழ்க” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: