குழந்தை பெற்ற 3 மாதத்தில் நடிக்க வந்தது ஏன்?காஜல் விளக்கம்

சென்னை: திருமணத்திற்கு பிறகு நடிப்பில் பிசியாகி விட்டார் காஜல் அகர்வால். தற்போது இந்தியன் 2, கருங்காப்பியம், கோஸ்டி படங்களில் நடித்து வருகிறார். இதற்காக சென்னை வந்துள்ள அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தை பிறந்த 3 மாத்திற்குள் மீண்டும் நடிக்க வந்துவிட்டேன். கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு இதில் கொஞ்சம் வருத்தம்தான். டாக்டர்கள் 10 மாதங்கள் வரை ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை நான் சினிமாவை ஆழமாக நேசிக்கிறேன். திருமணத்திற்கு முன்பு நான் நடித்து முடிக்க வேண்டிய எல்லா படங்களையும் முடித்து விட்டுதான் திருமணம் செய்தேன்.

குழந்தை பெற்றேன். இப்போது எனக்காக பல படங்கள் காத்திருக்கிறது. நான் எப்படி வீட்டில் இருக்க முடியும்? குழந்தையை பாதுகாக்க எனது அம்மா இருக்கிறார். அவரும் என்னோடு படப்பிடிப்புக்கு வருகிறார். கேமராவுக்கு முன்னால் கேரக்டராகவும், பின்னால் ஒரு தாயாகவும் வாழ்ந்து வருகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கோஸ்டி காமெடி பேய் படம். பேய் படமும், காமெடி படமும் எனக்கு புதிதில்லை. ஆனால் இதில் இயக்குனர் கல்யாண் சில புதுமைகளை செய்துள்ளார். நான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன். அதில் ஒன்று காமெடி போலீஸ். கதைப்படி நான் சீரியசான போலீஸ்தான். ஆனால் ஆடியன்சுக்கு காமெடி போலீசாக தெரிவேன். அத்தோடு இந்த படத்தில் 7 இயக்குனர்களுடன் நடித்திருக்கிறேன்.

ரசிகர்களை எளிதில் அழவைத்து விட முடியும். சிரிக்க வைப்பதுதான் கடினம். அந்த வகையில் இது சவாலான பணி. காமெடி படங்களில் நடிப்பதால் கமர்ஷியல் ஹீரோயின் இமேஜ் குறைந்துவிடும் என்று நான் கருதவில்லை. இன்னும் அதிகமாக ரசிகர்களை சென்று சேர முடியும் என்று நினைக்கிறேன். இன்னும் அரசு சார்பு விருதுகள் எதுவும் வாங்கவில்லையே என்கிறார்கள். என்னை பொறுத்தவரை ரசிகர்களின் விசில் சத்தமும், கைதட்டலும்தான் விருது. அதை நிறைய வாங்கியிருக்கிறேன். ஆனாலும் அரசு விருதுகளை விரைவில் வாங்குவேன். அது எந்த படத்திலும் நிகழலாம்.

Related Stories: