எடப்பாடியுடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ்சுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

பெரியகுளம்: எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ்சை அண்ணாமலை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தற்போது 4 அணிகளாக உள்ளது. அதில் தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரிந்து கடைசியாக மோதி வருகின்றனர். இவர்கள் இருவரையும் பிரித்தது, பாஜகதான் என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எப்போது வந்தாலும், இருவரையும் சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேநேரத்தில் இருவரும் எப்போது வேண்டுமானாலும் டெல்லி சென்று இருவரையும் சந்தித்து வந்தனர். இதனால் அதிமுகவில் எந்த அணிக்கு பாஜ தலைவர்கள் ஆதரவு என்பதை கணிக்க முடியாமல் இருந்தது.

இந்தநிலையில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில் எடப்பாடி அணியும், பன்னீர்செல்வம் அணியும் போட்டிபோடுவதாக அறிவித்தன. அதில், ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தருவதாக கூறி வந்த, அண்ணாமலை திடீரென்று இருவரில் யார் என்பதை உடனடியாக சொல்ல முடியாது என்று அறிவித்தார். கடைசியாக இழுத்தடித்து ஆதரவை அறிவித்தார். இதனால் மனமுடைந்த எடப்பாடி பழனிசாமி, பாஜ ஆதரவு தெரிவித்தாலும் பிரசாரத்துக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டார். அண்ணாமலை பிரசாரத்துக்கும் அதிமுக தலைவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பிரசாரத்துக்கு ஆட்களையும் திரட்டவில்லை. இதனால் அண்ணாமலை 2 நாள் பிரசாரத்துடன் ஒதுங்கிக் கொண்டார். இந்த மோதல் இருந்து வந்த நிலையில், பாஜ முதுகில் குத்தி விட்டதாக எடப்பாடி கருதி வந்தார்.

இந்தநிலையில் அண்ணாமலைக்கு நெருக்கமான ஐடி விங்க் நிர்வாகி சி.டி.நிர்மல்குமார், திடீரென்று அதிமுகவில் இணைந்தார். அப்போது அண்ணாமலையை 420 என்று மறைமுகமாக குறிப்பிட்டு அறிக்கை விட்டார். அதைத் தொடர்ந்து மேலும் ஒரு நிர்வாகி அதிமுகவில் இணைந்தார். இதனால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்தார். இதுவரை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை மட்டுமே இழுத்து வந்த எடப்பாடி திடீரென தன் ஆதரவாளர்களை இழுக்கும் பணியை தொடங்கியதால், தானும் அதை செய்ய நேரிடும் என்று அண்ணாமலை நேற்று எச்சரித்திருந்தார்.இந்தநிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார். அவரின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் இருவரும் சிறிது நேரம் தனியாக பேசியதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் தாய் இறந்து பல நாட்கள் கடந்தநிலையில் எடப்பாடி, அண்ணாமலை மோதல் முற்றியநேரத்தில் வந்து சந்தித்துப் பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து எடப்பாடிக்கு எதிராக அதிரடி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்தை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் கூறியுள்ளார். வடமாநிலத்தவர்களுக்கு பாஜ எப்போதும் ஆதரவாக இருக்கும். கோவில்பட்டியில் பாஜவினர் எடப்பாடி உருவப்படத்தை எரித்தது பற்றி எனக்கு  தெரியாது. கூட்டணி கட்சி  தலைவர்களை இதுமாதிரி பண்ணாதீங்க. அது ரொம்பவும் தவறு. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பாஜவினர் வழங்க வேண்டும். உணர்ச்சி வசப்பட வேண்டாம்.  அவரவர் கட்சிக்காக  அவரவர்கள் வேலை செய்கின்றனர். எனவே, அவர்களது கட்சி கொள்கைக்கு எதிராக பாஜவினர் செயல்பட வேண்டாம்’’ என்றார்.

Related Stories: