விலையுயர்ந்த மருந்துகளுடன் ஒப்பிட்டால் ஜெனரிக் மருந்துகள் 90% விலை குறைவாக மக்கள் மருந்தகங்களில் கிடைக்கிறது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: விலையுயர்ந்த மருந்துகளுடன் ஒப்பிட்டால், ஜெனரிக்  மருந்துகள் 50% முதல் 90% வரை விலை குறைவாகவும்  தரத்துடனும்  மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, எழும்பூர் அரசு குடும்ப நல பயிற்சி மையத்தில், மக்கள் மருந்தக தினம் - 2023ஐ முன்னிட்டு, சிறப்பாக மக்கள் மருந்தக சேவை புரிந்தவர்களுக்கு     மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு  குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், உணவு பாதுகாப்பு  மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் லால்வீனா, பொது  சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் விஜயலட்சுமி  மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்: மக்கள் மருந்தக தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. 5வது மக்கள் மருந்தக தினத்தின் கருப்பொருள் “மலிவானது, தரமானது” என்பதாகும். மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை இந்த மக்கள் மருந்தக தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 620 மக்கள் மருந்தகங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 72  மக்கள் மருந்தகங்களும் பிற மாவட்டங்களில் 548 மக்கள் மருந்தகம் செயல்படுகிறது. நாள்பட்ட நோய்களான நீரிழிவு நோய், இதய-இரத்தநாள நோய்கள், புற்றுநோய்க்கான மருந்துகள், நுண்ணுயிர்க்கொல்லிகள், ஒவ்வாமைக்கான மருந்துகள், வயிறு-குடல் தொடர்புடைய மருந்துகள், போஷாக்கு பொருட்கள் கிடைக்கின்றன.

மருத்துவர்கள் மருந்துகளின் பெயர்களை பரிந்துரைச்சீட்டில் அவற்றின் ஜெனரிக் பெயர்களில் எழுதுவதன் மூலம், அவற்றை மக்கள் மருந்தகங்களில் ஜெனரிக் பெயர்களிலேயே வாங்கிக்கொள்ள முடியும். விலையுயர்ந்த அடையாளப்படுத்தப்பட்ட மருந்துகளுடன் ஒப்பிட்டால் ஜெனரிக் மருந்துகள் 50% முதல் 90% வரை விலை குறைவாகவும் இணையான தரத்துடனும் கிடைக்கின்றன. 1759 மருந்துகளும், 280 அறுவை சிகிச்சை சாதனங்களும், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளும் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: