ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மாணிக் சஹா: திரிபுரா முதல்வராக நாளை பதவியேற்பு..!

அகர்தலா: திரிபுரா முதல்வராக மாணிக் சாகா நாளை பதவியேற்கிறார். திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. திரிபுராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதற்கு முக்கிய காரணமாக அம்மாநில முதல்வர் மாணிக் சஹாவின் மிகப்பெரிய பங்கு என்று கூறுகின்றனர்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் ஒரு தரப்பினர் மத்திய பெண் அமைச்சர் பிரதிமா பவுமிக்கை புதிய பிரதமராக தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த சூழலில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் மாணிக் சஹாவை புதிய முதல்வராக தேர்வு செய்ய ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

திரிபுரா ஆளுநர் சத்யதேவ் நாராயணனை சந்தித்த மாணிக் சஹா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். திரிபுராவின் முதல்வர் யார் என்ற இழுபறி நீடித்து வந்த நிலையில், மீண்டும் மாணிக் சஹா தலைமையில் நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. அகர்தலாவில் நாளை நடைபெறும் பிரமாண்ட விழாவில் மாணிக் சஹா திரிபுராவின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

Related Stories: