சென்னை: தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக வதந்தி பரப்பிய பாஜக ஆதரவு இணையதளம் மீது திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு வீடியோ பரப்பப்பட்டு வந்தது. அந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து, வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி ெசய்ய கோரி பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். உடடியாக தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து தமிழ்நாடு காவல்துறை ஆய்வு செய்த போது, அது போலியான வீடியோக்கள் என தெரியவந்தது. தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை என்றும் உறுதியானது. அதே நேரத்தில் இது திட்டமிட்டு தமிழ்நாட்டின் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படுவதும் விசாரணையில் தெரியவந்தது.
அதைதொடர்ந்து தமிழ்நாடு போலீஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்தி மொழியில் அது போலியான வீடியோ என்று பதிவு செய்து விளக்கம் அளித்து இருந்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி பகிரப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், வடமாநிலத்தவர்களுக்கு எதிராக வதந்திகள் பரப்பப்படுவதாக தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோல் தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாஜக ஆதரவு இணையதளமான ‘opindia.com’ மூலம் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் படி திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தமிழ்நாட்டிற்கு வந்துள்ள வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியும், வெளிமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கருத்து வேறுபாட்டினை பாஜக ஆதரவு இணையதளமான ‘opindia.com’ ஏற்படுத்தி இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து திருநின்றவூர் போலீசார் ‘opindia,com’ இணையதள சிஇஓ ராகுல் ரூசன், எடிட்டர் நுபுர் சர்மா மற்றும் இததோடு தொடர்புடைய நபர்கள் மீது ஐபிசி 153(ஏ), 505(1),(பி),505(2) ஆகீய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.