சென்னை: சென்னை முகப்பேர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால் பள்ளி வளாகத்தில் அடர் வனம் உருவாகியுள்ளது. பூத்து குலுங்கும் பூக்கள் 5000 சதுர அடியில் ஆயிரம் மரங்கள் 48 வகைகள். நாம் பார்ப்பது மாநகராட்சி பூங்காவோ புறநகர் பகுதியில் உள்ள வனப்பகுதியோ அல்ல சென்னை கிழக்கு முகப்பேரில் அமைந்திருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தான் இந்த காட்சி, கொரோனா காலகட்டத்தில் துவங்கப்பட்டது தான் மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டம் தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு முகப்பேர் அரசுப்பள்ளி வளாகத்தில் சிறிய அளவில் இருந்த தோட்டத்தை குறுங்காடாக மாற்ற முயற்சி எடுத்தார்கள்.
அதில் மகிழம், வேம்பு, அரளி, பூவரசு, புங்கன் போன்ற 48 வகையான மலர்கள் வளர்க்கப்பட்டுள்ளன. 5,000 சதுர அடி பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனம் உருவெடுத்துள்ளது. விதை பந்து தயாரித்தல், தோட்டம் வளர்த்தல், செடிகளை பராமரித்தல், புற்களை வெட்டுதல், மியாவாக்கி காடுகளுக்கான பாத்தியல் அமைத்தல் போன்ற பணிகளை மாணவர்கள் குழுகுழுவாக பிரிந்து ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த புரிதல், மரம் நடுதல் குறித்த அவசியம் தெரியவந்துள்ளதாக பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார்.
பறவைகளுக்கு உணவு வைத்தல், பசுமை பயணங்களை மேற்கொள்ளுதல், பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துதல் என பல்வேறு முயற்சிகளை மாணவர்களின் சூழலியல் அறிவுக்காக அரசு பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு குடியிருப்புகளுக்கு நடுவே பள்ளி வளாகம் இருந்த நிலையில் தற்போது குறுங்காடாக மாறியதன் மூலம் பசுமை மிகுந்த பரப்பாக மாறியுள்ளது. முகப்பேர் அரசுப் பள்ளி இத்தகைய முயற்சிகளை அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.