இளம்பெண்ணை காதலித்து ரூ.68 லட்சம் ஏமாற்றிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை? நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ், தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

பூந்தமல்லி: இளம்பெண்ணை காதலித்து ரூ.68 லட்சம் ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட வாலிபர், போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு, மாயமானார். இதையடுத்து, போரூர் ஏரியில் தீயணைப்பு வீரர்கள், அந்த வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண், கடந்த வாரம் மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘‘நான் 10ம் வகுப்பு படிக்கும் போது வடபழனியை சேர்ந்த நிஷாந்த் (28) என்பவரை  காதலித்து வந்தேன்.

கல்லூரியிலும் எங்கள் காதல்  தொடர்ந்தது. என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பலமுறை என்னிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும், தொழிலில் முதலீடு செய்வதாக கூறி, எனது பூர்வீக சொத்தை விற்று வந்த பணத்தில் சிறுக சிறுக ரூ.68 லட்சம் வரை பெற்று கொண்டார். வருங்கால கணவர் என்பதால் நானும் பணத்தை கொடுத்துவிட்டேன். ஆனால், அந்த பணத்தை திருப்பி தரவில்லை. அதுமட்டுமின்றி, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபர் மகளை கடந்த 3ம் தேதி நிஷாந்த் திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது.  எனவே, அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.

போலீசார் விசாரணையில், நிஷாந்த் இளம்பெண்ணை ஏமாற்றியதும், வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதும் தெரிந்தது. உடனடியாக அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர், போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதனிடையே, இந்த வழக்கு விருகம்பாக்கம் மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த நிஷாந்த், நேற்று முன்தினம் இரவு ஓ.எம்.ஆர் சாலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக  தெரிகிறது. பின்னர் அவர், நண்பர் ஒருவரின் காரை எடுத்துக் கொண்டு  அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் நிசாந்த், ‘‘எனக்கு வாழவே பிடிக்கவில்லை. நான் போரூர்  ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்,’’ என்று வாட்ஸ்அப் மூலம்  நண்பர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போரூர் ஏரி அருகே வந்து  பார்த்தபோது, கார் மட்டும் நின்றது. நிசாந்த் மாயமாகி இருந்தார்.  இதுகுறித்து போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விருகம்பாக்கம்  மற்றும் மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, போரூர் ஏரியில் இறங்கி நிஷாந்த்தை தேடிவருகிறார்கள். நிசாந்த் ஏரியில் குதித்து  தற்கொலை செய்து கொண்டாரா அல்லது போலீசில் புகார் செய்ததால் கைது  நடவடிக்கைக்கு பயந்து அவர் வேறு எங்காவது தப்பி ஓடி விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: