வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து முதல்வர் உறுதி: சென்னை சிவில் இன்ஜினியரிங் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் பேட்டி

சென்னை: சென்னை சிவில் இன்ஜினியரிங்  சங்கத்தினர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை நேற்று சந்தித்தனர். இதுகுறித்து, சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ பரப்பப்படுவது வடமாநிலங்களில்  அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. ஹோலி பண்டிகை காலமாக இருந்தாலும் அதையும் தாண்டி 70% முதல் 90% வரை வட மாநிலத்தவர் வெளியேறி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.  கட்டிட தொழிலாளர்கள் தேவை  தமிழ்நாட்டிற்கு அதிகமாக இருக்கிறது.

கட்டுமான தொழிலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 40% பேர்தான் உள்ளனர். மீதி 60% பேர் வடமாநில தொழிலாளர்கள் தான். கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் கட்டுமான தொழிலில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது மற்றும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான அவதூறுகளை பரப்புபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதியளித்த தமிழ்நாடு முதல்வரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதேபோல், டிஜிபி சைலேந்திரபாபு வட மாநில தொழிலாளர் பாதுகாப்பு குறித்து வீடியோ பதிவிட்டுள்ளதற்கும் சங்கம் சார்பாக நன்றி.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: